வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பத்மசாலவர் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகின்றார். இவர் மன்னார்குடி கீழபாலம் பகுதியில் அடகு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கார்த்திக் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். இதனையடுத்து கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக கார்த்திக்கிற்கு அருகில் இருப்பவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன்பின் கார்த்திக் கொடுத்த புகாரின்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன், இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கொள்ளையர்கள் கடையில் உள்ள அலமாரியில் இருந்து 1 1/2 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. மேலும் கடையின் உள்ளே இருந்த லாக்கரை மர்மநபர்கள் உடைக்க முடியாத காரணத்தினால் அதில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் தப்பிவிட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.