திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்த செய்தி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலகத்தில் உள்ள தன்னுடைய அறையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இடுவதற்கான கோப்புகளை அதிகாரிகள் மேஜையில் வைத்த உடன் ஒரு அதிகாரி பேனாவை கொடுக்க மூத்த அமைச்சர் கே.என் நேருவும் பேனாவை நீட்டினார். அந்த சமயத்தில் அமைச்சர் கே.என் நேருவுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக அவர் கொடுத்த பேனாவை உதயநிதி வாங்கி கோப்பில் கையெழுத்திட்டார். உதயநிதி ஸ்டாலின் இன்று 3 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
அதன்படி விளையாட்டு வீரர்களுக்கான மாத ஓய்வூதியத்தை 3000 ரூபாயில் இருந்து 6000 ரூபாயாக அதிகரிக்கும் திட்டம், துப்பாக்கிச் சுடும் வீராங்கனை நிவேதிதாவுக்கு ரூ. 4 லட்சம் காசோலை, 2022-23 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி போன்றவற்றில் கையெழுத்திட்டுள்ளார். இந்த நிகழ்வுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். அங்கு உதயசூரியன் சின்னமும், உதயத்தை வரவேற்போம் போன்ற வாசகங்கள் மலர்களால் எழுதப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தையும் பெற்றது. மேலும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் படத்திற்கு பிறகு இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.