இந்தியாவிற்கு உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் மருத்துவ உபகரணங்களை பிரித்தானிய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. அதிலும் குறிப்பாக டெல்லி, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தட்டுப்பாடும் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
இதனை சமாளிக்க முடியாமல் இந்தியா உலக நாடுகளை நாடியுள்ளது. அதன்படி பிரித்தானியா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளது. அந்த வரிசையில் பிரித்தானியா அரசு 1000 வென்டிலேட்டர்களையும் 18 டன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரித்தானியாவின் வெளியுறவு காமன்வெல்த் மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.
இந்த மருத்துவ உபகரணங்கள் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ்-124 பெல்பாஸ்ட் நகரில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் டோமினிக்ராப் கூறியதாவது “கொரோனா தொற்றை சமாளிக்க இந்தியாவும் பிரித்தானியாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றது. அந்த வகையில் பிரித்தானியாவில் உபரியாக இருந்த மருத்துவ உபகரணங்களை நாங்கள் இந்தியாவிற்கு அனுப்பி உள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.