ரஷ்ய படைகளை குழப்ப, உக்ரைன், சாலைகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகள் திசையை மாற்றி வைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. கடல்வழி, வான்வழி மற்றும் தரை வழி என்று தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதால் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. உக்ரைனில் உள்ள பெரும்பாலான இராணுவ இலக்குகள் ரஷ்யப் படைகளால் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இதனிடையே ரஷ்ய அரசு போரை முடித்துக் கொள்வதற்காக பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரைனை அழைத்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததாக கூறப்படுகிறது. எனவே, உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை அதிகப்படுத்த ரஷ்ய ராணுவம் உத்தரவிட்டிருக்கிறது.
இந்நிலையில் உக்ரைன் நாட்டினுடைய சாலை பராமரிப்பு நிறுவனமானது, ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் தாக்குதலை தாமதப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய ராணுவத்திற்கு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக சாலை பகுதிகளில் இருக்கும் வழிகாட்டி பலகைகளில் மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.
அதாவது, சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டு பலகைகளின் மூலமாக விரைவில் அவர்கள் செல்லக்கூடிய இடத்தை அடைவார்கள். எனவே, பலகைகளில் திசைகளை மாற்றி இடங்களின் பெயரை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக, ‘ரஷ்யாவிற்கே திரும்பி போ’ என்பது போன்ற வாசகங்களை எழுதி வைத்திருக்கிறார்கள்.