Categories
உலக செய்திகள்

“இந்தியா மற்றும் சீனா நினைத்தால் போர் முடிவடையும்!”…. நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்…!!!

உக்ரைன் அரசு, சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் போரை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 11-ஆம் நாளாக கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் அரசும் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பதால் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கின்றன. ரஷ்ய படைகள் தொடர்ச்சியாக பீரங்கி தாக்குதல், துப்பாக்கிச் சூடு தாக்குதல், ஏவுகணை தாக்குதல், வெடிகுண்டு தாக்குதல் என்று உக்ரைனை நிலைகுலைய செய்து வருகின்றன.
இதனைத்தொடர்ந்து மீட்பு பணி மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உக்ரைன் நாட்டின் இரு நகர்களில் தற்காலிகமாக போரை நிறுத்துவதாக ரஷ்யா நேற்று அறிவித்திருக்கிறது. எனினும் அதிக நேரத்திற்கு இந்த போர் நிறுத்தி வைக்கப்படவில்லை. மீண்டும் தாக்குதல் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், உக்ரைன் அரசு சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் நினைத்தால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான டிமித்ரோ குலேபா தெரிவித்திருப்பதாவது, தங்கள் நாட்டில் ஆப்பிரிக்கா, ஆசியாவிலிருந்து மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கல்வி கற்பதற்கு  பெரும் உதவியாக இருந்தோம்.
பிற நாட்டு மாணவர்களை போரிலிருந்து காக்க பல்வேறு முயற்சிகளை செய்தோம். மேலும் பாதுகாப்பாக மாணவர்கள் மீட்கப்பட வேண்டும் எனில் ரஷ்யா தாக்குதலை நிறுத்த வேண்டும். இந்தப் போரில் வெற்றி அடைந்ததாக காட்டிக்கொள்ள ரஷ்யா முயன்று வருகிறது. எங்கள் மண்ணை காக்க நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இந்தியா, சீனா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகள் ரஷ்யாவிடம் தாக்குதலை நிறுத்திக் கொள்ளுமாறு கேட்க வேண்டும். இந்த போர் யாருக்கும் விருப்பமில்லாதது என்பதை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |