உக்ரைனில் நடக்கும் போரில், ரஷ்யா போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளது என்று ஐ.நா சபையின் புலனாய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால் ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் போர் குற்றங்கள் செய்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலானய்வு குழு தகவல் வெளியிட்டுள்ளது.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையராக இருக்கும் Michelle Bachelet , கடந்த மே மாதத்தில் உக்ரைன் நாட்டில் சட்டவிரோதமான முறையில் ரஷ்யப்படையினர் கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டினார். அதனையடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரஷ்யப்படையினர் உக்ரைன் நாட்டில் இருக்கும் சுமி, செர்னிஹிவ், கார்கிவ், கியேவ் போன்ற பகுதிகளில் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்கள் தெரிவித்ததாவது, நாங்கள் பார்வை மேற்கொண்ட இடங்களில் மரண தண்டனைகள் அதிகம் நிறைவேற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து போனோம். 16 நகர்கள் மற்றும் வீடுகளில் இவ்வாறான மரணங்கள் தொடர்பில் விசாரணை நடக்கிறது என்று கூறியிருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்துதல், பாலியல் துன்புறுத்தல், மின்சார அதிர்ச்சி போன்றவற்றையும் ரஷ்ய படையினர் செய்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.