உலக அளவில் கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தை பெற்றுள்ளது.
சீனாவில் முதன் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியுள்ளது. இதனால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையிடமாக கொண்ட லோவி என்ற நிறுவனம் உலக அளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிறப்பான முறையில் செயல்பட்ட நாடுகள் பற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டது.
98 நாடுகளை கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. நோய் கட்டுப்பாடு, அரசியல் செயல்பாடு , பொருளாதார பராமரிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. இதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்துவதில் நியூசிலாந்து முதலிடத்தையும் அதற்கு அடுத்தபடியாக வியட்நாம் , தைவான், தாய்லாந்து ஆகிய நாடுகளும் பிடித்துள்ளது.
கடந்த 36 வாரங்களில் 98 நாடுகளில் எடுத்த புள்ளிவிவரங்களின்படி நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டது ஆய்வில் தெரியவந்தது. தெற்கு ஆசியாவில் உள்ள நாடுகளில் கொரானா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா 86 ஆவது இடத்தை பெற்றுள்ளது. அமெரிக்கா இந்த தடுப்பு நடவடிக்கையில் 94வது இடத்தில் உள்ளது. சீனா கொரோனா பரவலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் பற்றி முழு விவரங்கள் எதுவும் கிடைக்காததால் இந்த ஆய்வில் சீனா இடம்பெறவே இல்லை.