அமெரிக்காவிற்கு அடுத்ததாக பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், “அமெரிக்காவில் தற்போது வரை 50,75,678 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் தற்போது வரை 6.5 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்திருக்கிறோம். வேறு எந்த ஒரு நாடும் இவ்வளவு எண்ணிக்கையிலான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை.
இந்தியா 1.1 கோடி கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அந்நாட்டில் 150 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் கொரோனா பரிசோதனையில் முதல் இடத்தில் நாங்கள் தான் இருக்கிறோம். மேலும் அதிக தரமுள்ள பரிசோதனைகளையும் நாங்கள் செய்து வருகிறோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.