உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 30 பதக்கங்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியானது ,டெல்லியில் கடந்த 18-ம் தேதியிலிருந்து நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 53 நாடுகளை சேர்ந்த 294 வீரர்,வீராங்கனைகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியின் தொடக்க நாளிலிருந்தே, இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வந்துள்ளனர் . இறுதி நாளான நேற்று 2 பதக்கங்களை, இந்தியா கைப்பற்றியது. இப்போட்டியில் ஆண்கள் பிரிவினருக்காக நடத்தப்பட்ட டிராப் அணி பிரிவில் ,கைனன் செனாய், பிரித்விராஜ் தொண்டைமான் மற்றும் லாக்ஷே ஷெரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் சுலோவக்கியா அணி வீரர்களுடன் மோதி, இறுதிகட்டத்தில் 6-4 என்ற கணக்கில் இந்திய அணி வீரர்கள் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர் . இதேபோன்று பெண்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் ஸ்ரேயாசி சிங், ராஜேஷ்வரி குமாரி, மனிஷா கீர் ஆகிய இந்திய வீராங்கனைகள் கஜகஸ்தான் அணிகளோடு மோதி, 6-0 கணக்கில் இந்திய வீராங்கனைகள் சுலபமாக வெற்றி பெற்று, தங்கப்பதக்கங்களை கைப்பற்றினர். இப்போட்டியில் 22 நாடுகள் பதக்கப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பட்டியலில் இந்தியா 15 தங்கம், 9 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் பெற்று மொத்தமாக 30 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இதற்கடுத்து அமெரிக்கா 8 பதக்கங்களுடன் 2வது இடத்திலும், இத்தாலி 4 பதக்கங்களுடன் 3வது இடத்திலும் உள்ளது. இதைப்பற்றி இந்திய துப்பாக்கி சுடுதல் சங்கத் தலைவரான ரனிந்தர் சிங், கூறுகையில்,கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியில், இந்தியாவில் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்றிருப்பது ,உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குவதாக மகிழ்ச்சி தெரிவித்தார். இதையடுத்து ஒலிம்பிக் போட்டில், துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான பிரிவில், 15 இடங்களுக்கு இந்திய வீரர்கள் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .