பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் உலக நாடுகள் போர் ஒத்திகை நடத்தியதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக்கடலில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா விரும்புகிறது. இதோடு மட்டுமின்றி தைவானையும் கையகப்படுத்த சீனா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் ஒன்றிணைந்து பிலிப்பைன்ஸ் கடற்கரை பகுதியில் போர் ஒத்திகை நடத்தியுள்ளனர். இது குறித்து அறிந்த சீனா கடும் கோபத்தில் உள்ளது. ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவுடன் ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதினால் ஆத்திரத்தில் உள்ள நிலையில் இதுவும் சேர்ந்து கொண்டது.
ஒருவேளை தைவானுக்கு ஆஸ்திரேலியா உதவி புரிந்தால் அதற்கான விளைவுகளை சந்திக்கக் கூடும் என்று சீனா எச்சரித்துள்ளதாக பிரபல பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் உள்ள நட்புறவு குறித்தும் சீனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மேலும் தைவானுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்காவுடன் போரிட தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தைவான் தீயுடன் விளையாடுவதாகவும் அதனை கைப்பற்றுவதை எவராலும் தடுக்க முடியாத செயலாகும் என்று சீனா எச்சரித்துள்ளது.
குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் 150 போர் விமானங்களை தைவானின் வான் எல்லைக்குள் சீனா ஏவியுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சீனா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தைவான் அதிபரான Tsai Ing-wen தெரிவித்துள்ளார். மேலும் தனது நாட்டு மக்களின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து விளைய நேர்ந்தால் தைவான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக உள்ளது என Tsai Ing-wen கூறியுள்ளார்.