Categories
பல்சுவை

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம்…..!!

பாதிக்கப்பட்ட  மக்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி அன்புக்கரம் நீட்டி உதவும் உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ….!!

உலகில் யுத்தம் மற்றும் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கம் சர்வதேச ரீதியில் அமைக்கப்பட்டன. தற்போது உலக நாடுகளில் 178 தேசிய கிளைகளை கொண்ட இந்த அமைப்பு உலகம் முழுவதும் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கத்தின் பிரதான கருப்பொருள் யுத்தங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு இன,மத,மொழி வேறுபாடின்றி உதவி செய்வதும். முரண்பாடு மிக்க தரப்பினருக்கு இடையே நடுநிலை வகித்து சமாதானத்திற்கு உதவுவதும் ஆகும். இந்த சங்கத்தை உருவாக்கிய ஜீன் ஹென்றி டியூனண்ட் பிறந்த தினமான மே மாதம் 8ம் தேதியை நாம் உலக செஞ்சிலுவை தினமாக கொண்டாடுகின்றோம். 1859 ஜூன் 25ல் வட இத்தாலியில் சோல்பரிநோ யுத்தம் நடைபெற்ற போது ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் இத்தாலிய படைகளை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் பேர் போர்க்களத்தில் குற்றுயிராய் கிடந்தனர்.

 

காயங்களுடன் கிடந்தவர்களிடம் எந்த தரப்பினரும் அக்கறை காட்டவில்லை. இந்த காட்சி ஹென்றி வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஊர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தார். பகை நிறைந்த அந்த சூழலில் இவரது பணி புரட்சிகரமானதாக பேசப்பட்டது. 1863 இல் நிவாரண பணியில் ஈடுபட்ட தொண்டர்களை அடையாளம் காட்டுவதற்காக வெள்ளைப் பின்னணியில் செஞ்சிலுவை சின்னம் தேர்வு செய்யப்பட்டது. முதலாம் உலகப் போருக்குப் பின்னர் 1922 செக்கோஸ்லோவாக்கியாவில் ஈஸ்ட்டர் திருநாளையொட்டி மூன்று நாட்கள் போர்நிறுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக கொண்டாட தூண்டுகோலாக அமைந்தது எனலாம். இருப்பினும் 1948 ஆம் ஆண்டு முதல் இந்த நாளை செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது.செஞ்சிலுவை கிறிஸ்துவ சமயத்தை பிரதிபலிப்பது போல் அமைந்திருப்பதால் இஸ்லாமிய நாடுகளில் அதன் சின்னம் செம்பிறையாக கருதப்பட்டது.

Categories

Tech |