உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என்று, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, ” இந்த போட்டியில் இரு அணிகளும் சரிசமமாக உள்ளனர். இங்கிலாந்து ஆடுகளத்தின் தன்மை மற்றும் சீதோஷ்ண நிலை ஆகியவை நியூசிலாந்திற்கு ஏற்றவாறு இருக்கும். இந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக ஸ்விங் ஆகும். எனவே நியூசிலாந்து அணிக்கு பழக்கமானது என்பதால், அவர்கள் எந்த ஒரு தடுமாற்றமும் இன்றி சிறப்பாக பந்துவீச முடியும். இதன் அடிப்படையில்தான் நியூசிலாந்து அணிக்கே சாதகமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
இரு அணிகளும் பேட்டிங்கில் சமபலத்துடன் இருக்கின்றன. அதேபோன்று ஸ்விங் பந்துகளை வீசக்கூடிய வீரர்களும் இரு அணிகளில் உள்ளனர். இதனால் எந்த அணி சிறப்பாக பந்து வீசுகிறதோ அந்த அணி வெற்றி பெற்று ,கோப்பையை கைப்பற்றும் . நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஒரு பொறுமைசாலி. தேவைப்படும் நேரத்தில் தாக்குதல் பாணியை கையில் எடுப்பார். இதற்கு எதிரானவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. அவர் எப்போதுமே அதீத ஆக்ரோஷத்துடன் போட்டியில் செயல்படக்கூடியவர். இதனால் வெவ்வேறு அணுகுமுறையை கொண்ட இருவரில் யாருடைய கை ஓங்கப் போகிறது, என்பதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்”, என தெரிவித்தார்.