கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் பெரும்பாலும் பணக்கார நாடுகளுக்கே சென்றடைவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வேதனை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குனரான டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஜெனீவாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” ஒவ்வொரு நாடுகளும் தங்களின் மக்கள் தொகையில் குறைந்தது 40% அளவிற்கு தடுப்பூசி செலுத்தி கொண்ட பின்னரே பூஸ்டர் தடுப்பூசி போடுவது குறித்து தீர்வு எடுக்க வேண்டும். அதுவரையில் பூஸ்டர் தடுப்பூசி செல்வது குறித்து எந்தவொரு அனுமதியும் வழங்கக்கூடாது. அதிலும் சர்வதேச அளவில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து கொடுக்கப்பட்ட 5.5 மில்லியன் தவணை தடுப்பூசிகளில் ஏறக்குறைய 80% பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கே சென்றுள்ளது. இதன் காரணமாக 2002 ஆம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் திட்டத்தை பணக்கார நாடுகள் கைவிட வேண்டும்.
குறிப்பாக உலகில் உள்ள பல்வேறு ஏழை நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. மேலும் பொருளாதாரத்தில் சற்று பின்தங்கியுள்ள மற்றும் நடுத்தர நாடுகளிலும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உலக அளவில் இருக்கும் மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் அதன் சங்கங்களின் அமைப்பானது மாதத்திற்கு சுமார் 1.5 மில்லியன் கொரோனா தொற்று தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதனை தொடர்ந்து தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் பணக்கார நாடுகள் தங்கள் நாட்டு குடிமக்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொள்ளாமல் மற்ற நாடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிலும் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கும் உலகளாவிய திட்டமான ‘கோவாக்ஸை’ செயல்படுத்தும் சர்வதேச அமைப்புகள் இந்த நடப்பு ஆண்டில் அவர்களின் முந்தைய குறிக்கோளான இரண்டு பில்லியன் தவணை தடுப்பூசிகளில் இருந்து சுமார் 30% குறைந்துள்ளது” என்று மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பணக்கார நாடுகள் தங்களது மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு கோரிக்கை வைத்தது. இந்த நிலையில் இஸ்ரேல், இங்கிலாந்து, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டில் இருக்கும் 18 வயதுக்கு மேலானோருக்கு இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தியதற்கு பின்பு மூன்றாவது தவணை தடுப்பூசியும் போடுவதற்கான திட்டங்களை துவக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.