உலக காண்டாமிருகம் தினமானது நேற்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டுள்ளது.
உலகில் அழிந்து வரும் உயிரினங்களின் ஒன்று காண்டாமிருகம். இதன் முக்கியதுவத்தை பற்றி நம்மிடையே உணர்த்துவதற்காகவே ஆண்டுதோறும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருகம் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து நேற்று இந்த தினமானது கொண்டாடப்பட்டுள்ளது. அதிலும் இந்த காண்டாமிருகங்கள் நன்றாக கேட்கும் திறன் மற்றும் மோப்ப சக்தி கொண்ட விலங்காகும். ஆனால் இவைகளின் பார்வைத்திறன் குறைவு.
இதுவரை உலகில் கருப்பு, வெள்ளை, பெரிய ஒற்றை கொம்பு, சுமத்திரன் மற்றும் ஜாவா போன்ற ஐந்துவகை காண்டாமிருகம் இனங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக 5,00,000 காண்டாமிருகம் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்துள்ளன. ஆனால் அவைகள் காலப்போக்கில் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதிலும் தற்போது வெறும் 68 ஜாவா மற்றும் 80 சுமத்திரன் காண்டாமிருகங்களே உள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐந்து வகைகளில் மிக முக்கியமானதாக கூறப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கையானது 20,000 ஆகும்.
இதனை அடுத்து பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் பொதுவாக இந்தியா காண்டாமிருகம் என்றழைக்கப்படுகிறது. இவற்றைப் பாதுகாப்பதன் மூலம் இந்தியாவில் அதன் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தலாம் என்று கூறப்படுகிறது. தற்போது 3,500 காண்டாமிருகங்கள் உள்ளன. இவை முந்தைய அளவை விட குறைவாகவே இருக்கிறது. அதிலும் உலகில் மூன்றில் இரண்டு பங்கு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் அமைந்திருக்கும் காசிரங்கா தேசிய பூங்காவில் காணப்படுகின்றன.