திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவர் நேற்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கருணாநிதிதான் விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்தவர். அரசுத் துறைகளிலும் தற்பொழுது வரை ஊழல் குறையவில்லை. கருணாநிதியை பின்பற்றி தற்போது மு க ஸ்டாலினும் திரைப்பட ஹீரோ போல பேசி வருகிறார். விவசாயி போல போட்டோ ஷூட் எடுத்துக்கொண்டுள்ளார் . அவருக்கு தமிழ் கூட சரியாகப் பேச வரவில்லை.
திமுகவினர் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை பல்வேறு நிலம் வீடுகளை அபகரித்து நில அபகரிப்பு புகாரில் பிடிபட்டவர்கள். தற்சமயம் இவர்கள்தான் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர். முன்னாள் அமைச்சர் நேரு தன் வயதை விட குறைந்த வயதுடைய உதயநிதியிடம் ஆசீர்வாதம் வாங்கும் அவலத்தில் திமுக உள்ளது. நடக்கவிருக்கும் தேர்தலுக்கு பின் கரை வேட்டியுடன் திமுகவினர் வெளியில் நடக்க மாட்டார்கள்.
பாஜக 2021ல் மேற்கு வங்கத்தில் ஆட்சியை அமைக்கும். 2026 ல் தமிழகத்திலும், கேரளாவிலும் ஆட்சியை அமைக்கும். பிரதமர் மோடியே இன்னும் 40 ஆண்டுகளுக்கு ஆட்சி அமைப்பார். திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதே எங்களது முதற்கட்ட கடமையாகும். திமுகவினர் ஓட்டுக்காக ரூ.2000 பணம் கொடுக்க கூறியுள்ளார்கள். மக்கள் தங்களது வாக்குகளை யாரிடமும் விற்க வேண்டாம் என்று நான் பேசினேன். இதனை மாற்றி தமிழக அரசு மக்களுக்கு அளிக்க இருக்கும் பொங்கல் பரிசை நான் சுட்டிக் காட்டி பேசியதாகவும் கூறப்பட்டது.
அதிமுக பாஜக கூட்டணிகளுக்கு இடையே கொள்கை மாறுபாடு மட்டுமே உள்ளது. வேறு எவ்வித பிரச்சனையும் கிடையாது. எங்களுக்காக உள்ள தொகுதிகளை நாங்கள் கேட்டுப் பெறுவோம். தலைமை அறிவித்தால் நான் தேர்தலில் போட்டியிடுவேன். தற்போது அரசியல் மிகவும் கெட்டுப் போயுள்ளது. வருங்கால இளைஞர்கள் அரசியலில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டும். என்று கூறினார்.