சேறும் சகதியுமாக உள்ள உழவர் சந்தையை சீரமைத்து தருமாறு வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையில் தற்போது போதிய வசதி இல்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவை சிங்காநல்லூர் உழவர் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இதன் காரணமாக சுகாதாரமான முறையில் காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்ய இயலவில்லை என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தையில் துர்நாற்றம் வீசுவதால் மக்களும் காய்கறிகளை வாங்க வரவில்லை என்று கூறுகின்றனர். இந்நிலையில் சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் உழவர் சந்தையை மாநகராட்சி நிர்வாகம் சுத்தம் செய்ய வேண்டுமென்று வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “சுத்தம் செய் சுத்தம் செய் கொரோனா காலத்தில் சந்தையை சுத்தம் செய்” என்ற பதாகைகளை ஏந்தி உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அங்கு வந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.