இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதே சமயத்தில் எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உளவு பார்த்ததாக கருதிய ஈரான் தங்கள் நாட்டை சேர்ந்த பலரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களுக்கு மரண தண்டனை மற்றும் கொடூரமான தண்டனைகளையும் ஈரான் அரசு வழங்கி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேல் நாட்டுடன் உளவு போன்ற மோசடி செயல்களில் ஈடுபட்ட ஏழு பேரை ஈரான் அரசு கைது செய்தது. அவ்வாறு கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு ஈரான் அரசு இன்று தூக்கு தண்டனை வழங்கியது. மீதமுள்ள மூன்று பேருக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.