உமிழ்நீர் மூலமாக கொரோனாவை கண்டறியும் எளிய சோதனை அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் தற்போது வரை 53.61 லட்சம் பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 1.69 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கண்டறியும் சோதனை மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படுகின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலான மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. அதனால் அங்கு பரிசோதனை கருவிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரிசோதனைகளை அமெரிக்காவில் விரைவாக உருவாக்குவதற்கு எளிதாக உமிழ்நீர் மூலமாக கண்டறிகின்ற ‘ சலிவா டைரக்ட்’ என்ற சோதனை முறையை உருவாக்கி இருக்கின்றனர்.
அந்த சோதனை முறை, யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரி விஞ்ஞானிகளான நாதன் குருபாக் மற்றும் அண்ணே வில்லி ஆகியோரால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. அந்த சோதனை முறையை அந்நாட்டில் அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து உணவு மற்றும் மருந்துகள் நிர்வாக ஆணையர் ஸ்டீபன் ஹான் கூறுகையில், ” இந்தப் பரிசோதனை முறை கொரோனா பரிசோதனை செயல்திறனை அதிகரிக்க உதவும். பரிசோதனை கருவிகள் பற்றாக்குறையை இது தவிர்க்கும்” என்று கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கொரோனாவை கண்டறிவதற்கான உமிழ்நீர் மாதிரியை எடுத்து சோதிக்கும் நான்கு சோதனைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் அந்த சோதனை முடிவுகள் மாறுபட்டதாக அமைந்துவிட்டன.
தற்போது அறிமுகமாகி என்ற இந்த சோதனை முறையை அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கத்தின் வீரர்கள் மற்றும் ஊழியர்களை சோதிக்கும் திட்டத்தின் கீழ் அறிகுறியற்ற நபர்களுக்கான சோதனையாக அமையும்.
இந்தப் புதிய சோதனையின் சிறப்பம்சங்களாக, சோதனை எளிய முறை, செலவு குறைவு, வழக்கமான கொரோனா பரிசோதனை முறைகளை விட சிறந்தது, இதன் மூலம் கிடைக்கின்ற முடிவுகள் துல்லியமானது ஆகியவை இருக்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துடன் புதிய சேவையை பயன்படுத்த விரும்பும் பிற பரிசோதனை கூடங்களுக்கு இந்த சோதனை முறை உடனடியாக கிடைக்கின்றது.
மேலும் இந்த சோதனை முறை அமெரிக்கா முழுவதும் வரும் வாரங்களில் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்தப் பரிசோதனை முறை பற்றி விஞ்ஞானி அன்னே வில்லி கூறும்போது,” உமிழ்நீர் விரைவாகவும் மற்றும் எளிதாகவும் சேர்க்கப்படுவதால் இது கண்டறியும் போக்கில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நாங்கள் உணர்ந்துள்ளோம்” என்று கூறியுள்ளார். மேலும் இந்த சோதனையை பரவலாக்க ஏற்ற வகையில் நேரம் மற்றும் செலவுகளை மேலும் குறைக்க தயார் என்று இதனை கண்டறிந்து உள்ள விஞ்ஞானிகள் குழு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.