உலகத்தின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 3.2% சரிவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஐநா சபை தெரிவித்துள்ளது
ஐநா சபை வெளியிட்ட அறிக்கையில் தொற்று தீவிரமடைந்ததற்கு முன்பாக அதாவது கடந்த ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட கணிப்பில் நடப்பு ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது பொருளாதாரம் 3.2% சரியும் என்றும் கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்தால் ஊரடங்கு மூன்றாம் காலாண்டுக்கு நீடிக்குமானால் பொருளாதாரம் சரிவு 4.9 சதவீதத்தை தொட்டுவிடும். இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடங்களில் உலகத்தின் பொருளாதாரம் 8.5 டிரில்லியன் டாலர் இழப்பை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1930 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெரிய பாதிப்பிற்கு பின்னர் உலகம் சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார சரிவு இதுவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக தொற்று பரவியதை தொடர்ந்து மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. இதன் காரணமாக இரண்டாம் காலாண்டில் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் உலக நாடுகளின் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.