ஐநா சபையில் உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்ய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து அந்நாட்டின் ராணுவ இலக்குகளை அழித்து வருகிறது. மேலும், தொடர்ந்து 8-வது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. எனவே, இரு தரப்பை சேர்ந்தவர்களும் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே உலக நாடுகள், ரஷ்ய படைகள் உக்ரைனில் மேற்கொள்ளும் தாக்குதலை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்நிலையில், ஐநா சபையில் நேற்று அவசர கூட்டம் நடந்தது. அதில், உக்ரைன் நாட்டிலிருந்து ரஷ்யப் படைகள் உடனே வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்திற்காக, வாக்கெடுப்பு நடந்திருக்கிறது.
ஐ.நா சபையில், 193 உறுப்பு நாடுகள் இருக்கும் நிலையில் இந்த தீர்மானத்திற்கு 141 நாடுகள் வாக்களித்துள்ளன. இந்த தீர்மானத்தை எதிர்த்து, ஐந்து நாடுகள் வாக்களித்திருக்கிறது. எனவே உக்ரைன் நாட்டிலிருந்து, ரஷ்ய படைகள் உடனே வெளியேற்றப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மேலும் இந்த தீர்மானத்தில் இந்தியா உட்பட 35 நாடுகள் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.