ஐ.நா. அமைப்பு அன்னிய நேரடி முதலீட்டை அதிகமாக பெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
ஐ.நா. அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் உலக அளவில் அன்னிய நேரடி முதலீடு கடந்த வருடம் கொரோனா தொற்று பரவல் காரணமாக 35 சதவீதம் குறைந்துள்ளதாகவும், 2019-ஆம் ஆண்டில் உலகளாவிய அன்னிய நேரடி முதலீடு 1.5 லட்சம் கோடி டாலராக இருந்த நிலையில் கடந்த வருடம் ஒரு லட்சம் கோடி டாலராக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அன்னிய நேரடி முதலீடு இந்தியாவில் 27 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்தியாவில் 51 பில்லியன் டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு 2020-ல் 64 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்கு காரணம் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப தொழில்களின் அன்னிய நேரடி முதலீடு அதிகரிப்பு என்று கூறப்படுகிறது. இந்தியா அன்னிய நேரடி முதலீட்டை அதிகமாக பெற்ற நாடுகளின் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பொருளாதார பாதிப்பு இருந்த போதிலும் இந்தியாவின் வலிமையான அடித்தளம் தொடர்ந்து வலிமையூட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் வளர்ச்சி அடைந்த மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகளில் அன்னிய முதலீடு தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டு முதலீட்டை 80 சதவீத அளவுக்கு குறைவாக பெற்றுள்ளதாகவும், ஆனால் ஆசிய பகுதிகள் முதலீட்டை 4 சதவீதம் அதிகமாக பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.