ஐநா சபையை சேர்ந்த அதிகாரி தனது காரில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இஸ்ரேலில் பரபரப்பான சாலை ஒன்றில் ஐநா அதிகாரியின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் உள்ளே சிவப்பு நிற உடை அணிந்த பெண் ஒருவருடன் அந்த அதிகாரி மிகவும் நெருக்கமாக இருக்கிறார். இதனை காரின் அருகே அமைந்திருந்த கட்டிடத்தில் இருந்த நபர் காணொளியாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டுள்ளார். 18 வினாடிகள் எடுக்கப்பட்ட அந்த காணொளி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், பாலியல் குற்றங்களுக்கு எதிராக ஐநா நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், இந்த காணொளி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
காரில் இருந்த பெண் பாலியல் தொழிலாளியா அல்லது இருவரும் ஒருமித்த உறவில் இருந்தார்களா என்பது குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால் இது குறித்து ஐநா செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் கூறுகையில், “வெளியாகியுள்ள காணொளி ஐநா சபையை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. காணொளியில் இருக்கும் காட்சிகள் வெறுக்கத்தக்கது. இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே ஐநா சபை இந்த வீடியோவை அறிந்திருந்தது. இது எந்த இடத்தில் படமாக்கப்பட்டது என்பதும் தங்களுக்குத் தெரியும். இதுகுறித்த முறையான விசாரணை மேற்கொள்ளப்படும்” என கூறியுள்ளார்