மியான்மரில் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழக ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியன்று ராணுவ ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றியது. அதன் பிறகு முக்கிய தலைவர்களை சிறை வைத்தது. எனவே அந்நாட்டு மக்கள் இராணுவத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இராணுவம் அவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் பல பொது மக்கள் கொல்லப்படுகின்றனர். இந்நிலையில் மியான்மர் அரசு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, சுமார் 638 மக்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மியான்மரில் கலவரம் ஏற்பட்டு வருவதற்கு ஐ.நா.சபையின் மனித உரிமைகள் கழகத்தின் ஆணையர் மிச்செல்லே பேச்லெட் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த கலவரங்களினால் மியான்மரின் கயா என்ற மாநிலத்தில் கடந்த 21 நாட்களில் 1,08,000 மக்கள் தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அதேபோன்று மக்கள் வீடுகள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
மக்களை காக்கவேண்டியது இராணுவத்தின் கடமை. அவர்களை கண்மூடித்தனமாக தாக்குவதை இராணுவம் நிறுத்துவதற்கு, சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து, கோரிக்கை விடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.