செங்கல்பட்டு அருகே காதலிக்காவிட்டால் செல்பி புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றிவிடுவேன் என்று மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் சரவணன். இவரது அக்காள் மகள் மோனிஷா. மோனிஷா தன் தாய், தந்தை இறந்துவிட அவரது தாய் மாமனான சரவணன் வீட்டில் தங்கி அதே பகுதியில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மோனிஷாவிடம் காதலிப்பதாக கூறி பல மாதங்களாக வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக ப்ரொபோஸ் செய்துள்ளார். ஒரு நாள் எல்லை மீறி மோனிஷாவின் கையை பிடித்து இழுத்து நெருக்கமாக இருப்பது போல் செல்பி எடுத்துக்கொண்ட அவர் என்னுடைய காதலை நீ ஏற்காவிட்டால் இதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி நேற்று இரவு காதல் தொல்லை அளித்து வந்த வாலிபர் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இளைஞரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.