வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து, அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்க முனைப்பு காட்டி வருகின்றது. அதேசமயம் இந்த முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றியே தீர வேண்டும் என காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்தநிலையில், தலைநகர் டெல்லியின் மேற்கில் அமைந்துள்ள மட்டியாலா தொகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தற்போது நாட்டில் பொய்யான வாக்குறுதியளிக்கும் போட்டி ஒன்றை நடத்தினால் அதில் அரவிந்த் கெஜ்ரிவால் நிச்சயம் முதல் பரிசு பெறுவார் என்றார்.
மேலும் கடந்த மக்களவை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நீங்கள் மறந்துவிட்டீர்கள். ஆனால் டெல்லி மக்களோ, பா.ஜ.க.வினரோ அதை மறக்கவில்லை. லோக்பால் சட்டம் கொண்டு வரச்சொல்லி போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உதவியுடன் தான் நீங்கள் முதலமைச்சராக வந்தீர்கள். மத்தியில் உள்ள நரேந்திர மோடி அரசு லோக்பால் சட்டத்தை அமல்படுத்தி விட்டது. ஆனால் நீங்கள் ஏன் டெல்லியில் அந்த சட்டத்தை அமல்படுத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.