ஆசிரியரை அரிவாளால் வெட்டி மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குமாரபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அருள்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராணி அப்பகுதியில் இருக்கும் கால்வாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ராணி குளித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு வாலிபர்கள் அங்கு சென்றுள்ளனர். அதில் ஒரு வாலிபர் கால்வாய்க்குள் குதித்து ராணியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் வலி தாங்க முடியாமல் அலறிய ராணியின் சத்தம் கேட்டு அருள்தாஸ் அங்கு விரைந்து சென்றுள்ளார். அதற்குள் அந்த வாலிபர் ராணியின் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தனது கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டார். இதனை அடுத்து காயமடைந்த தனது மனைவியை மீட்டு சிகிச்சைக்காக அருள்தாஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து அருள்தாஸ் அளித்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியரை அரிவாளால் வெட்டி தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.