மர்ம நபர்கள் ஜவுளி கடை உரிமையாளரை தாக்கி செல்போனை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் ஜவுளி கடை உரிமையாளரான கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனது ஜவுளி கடைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அதன் பிறகு மீண்டும் கண்ணன் தனது காரில் கொடைக்கானலுக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வாழகிரி என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும் போது மற்றொரு கார் கண்ணனின் காரை மோதுவது போல முந்தி சென்றுள்ளது.
இதனால் பதற்றமடைந்த கண்ணன் அந்த காரில் வந்தவர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கோபம் அடைந்த அவர்கள் கண்ணனை சரமாரியாக தாக்கியதோடு, அவரது செல்போனை பறித்து விட்டு அங்கிருந்து சென்றனர். இது குறித்து கண்ணன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜவுளி கடை உரிமையாளரை தாக்கி செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.