மூதாட்டியை கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் பன்னிமடை கடை வீதி பகுதியில் முத்துலட்சுமி என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டின் இரண்டு அறைகளை சமையல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமியின் இளைய மகள் தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு முத்துலட்சுமியின் மகளான உஷா வீட்டிற்குள் சென்று பார்த்தபோது கழுத்து நெரிக்கப்பட்டு முத்துலட்சுமி பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் முத்துலட்சுமி அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், செல்போன் போன்றவை காணாமல் போனதால் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டியை கொலை செய்துவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.