இந்தியாவில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இல்லாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்குள் 8.2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
40 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின் படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7447 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 6565 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 643 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 239 ஆக உயர்ந்துள்ளது.
இதையடுத்து, ஹைட்ராக்சி கிளோரோகுயின் மருந்தினை மருத்துவர்களுக்கு பரிந்துரைத்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை அதிகாரி ஆர் கங்ககேத்கர், ” நோயாளிகளை கையாலும் மருத்துவ ஊழியர்களுக்கு ஆலோசனையுடன் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு இதனை பயன்படுத்த நாங்கள் அனுமதி வழங்கவில்லை” என அவர் விளக்கமளித்தார்.