முன்விரோதம் காரணமாக விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலாபுரம் பகுதியில் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு நம்பிராஜன் உட்பட 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். இதில் விவசாயியான நம்பி ராஜனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நம்பிராஜனுக்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகிய நம்பி என்பவருக்கும் இடையே நிலபிரச்சனை காரணமாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நம்பி ராஜனுக்கும், அழகிய நம்பிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதால் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இந்த தகராறில் கோபமடைந்த அழகிய நம்பி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நம்பிராஜனை வெட்டிவிட்டார். இதனையடுத்து நம்பிராஜனும் அவருடைய அரிவாளை பிடிங்கி அழகி நம்பியை திரும்ப வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த நம்பிராஜன் கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து அழகிய நம்பி உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறி அங்கிருந்த கல்லை எடுத்து நம்பிராஜனின் மீது போட்டு விட்டு அவரும் பலத்த காயமடைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த நம்பிராஜன் மற்றும் அழகிய நம்பியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு நம்பிராஜனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் நம்பிராஜனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த அழகிய நம்பிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.