தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில், தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, இட ஒதுக்கீடு, நீட் தேர்வு, நீர் மேலாண்மை, வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு, உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருந்தது.
இதை அடுத்து பன்வாரிலால் புரோகித் ஆங்கிலத்தில் உரையை வாசிக்க, அதனை சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையை வாசித்தார். சட்டப்பேரவை நிறைவு பெற்ற பிறகு இதனை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதன்படி ஜூன் 24-ஆம் தேதி வியாழக்கிழமை வரை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாளையும், நாளை மறுநாளும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.