வரும் 28ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அடுத்து வரும் இரு தினங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தமிழகம், ஆந்திரா, கர்நாடக கடற்பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் வளிமண்டலத்திற்கு கீழ் அடுக்கில் வடகிழக்கு மற்றும் கிழக்கு திசையிலிருந்து காற்று வீசக்கூடும் நிலையில்… வடகிழக்கு பருவமழை ஆனது தமிழகம் புதுவை ஆந்திரா தெற்கு கர்நாடகா பகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதியை ஒட்டி துவங்க கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்தெரிவித்தார்.
மேலும், வடகிழக்கு பருவமழையால் வடதமிழகத்தில் இயல்பாகவும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாகும் மழை கணிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.