உப்பளத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வராஜ் அவரது மனைவி தங்கம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு தங்கம்மாள் பணம் தர மறுத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் செல்வராஜ் வீட்டில் உள்ள பணத்தை எடுத்து விட்டு மது குடித்து விட்டு மீண்டும் தங்கம்மாளிடம் தகராறு செய்துள்ளார்.
இதனால் தங்கம்மாள் மீண்டும் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் தங்கம்மாள் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உள்புறமாகப் பூட்டியிருந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தங்கம்மாள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது செல்வராஜ் தூக்கில் தொங்கி சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வராஜின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.