ஊரடங்கு தளர்வுகள் நீட்டிப்புக்கு இங்கிலாந்து பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் பரவி வரும் டெல்டா வகை கொரோனா வைரஸ் அங்கு வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் 90 சதவீதம் டெல்டா வகை கொரோனா வைரஸ் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இங்கிலாந்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த இதற்கு முன் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 21ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
ஆனால் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் மேலும் 4 வாரங்களுக்கு அதாவது ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகள் நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு நீட்டிப்பதற்கான முன்மொழிவுக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் வழங்கியுள்ளது . இதில் 461 உறுப்பினர்கள் இந்த ஊரடங்கு தளர்வு நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 60 பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.