Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஊரடங்கால் பட்டுப்போன பட்டு விவசாய தொழில் ….!!

ஆசியாவின்  இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடி ஆக விளங்கிவரும் தர்மபுரி மாவட்டத்தில் பட்டு  விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தரத்தில் வெண் பட்டுக் கூடுகளை அதிக அளவு உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்கி வருகிறது. அங்கிருந்து பெருமளவில் வெண் பட்டுக்கூடுகள்  இறக்குமதி செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் தாக்கத்தால் பட்டுக்கூடு இறக்குமதி தடைபட்டதால், இந்தியாவில் பட்டுக்கூடு விலை அதிகரித்தது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் விளைவாக, பட்டு  நூல்களின் விற்பனை பாதிக்கப்பட்டதுடன், பட்டுக் கூடுகளின் விலை பெருமளவு வீழ்ச்சி கண்டது. ஆண்டுக்கு சராசரியாக 772 டன் பட்டுக்கூடுகளின் விற்பனை செய்து, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடியாக தருமபுரி பட்டுக்கூடு அங்காடி விளங்கி வந்தது.

ஆனால் கடந்த நான்கு மாதங்களாக மல்வரி விவசாயிகள் உற்பத்தி செய்த பட்டுக்கூடுகளில் இருந்து பிரிக்கப்பட்டு கச்சபட்டு, கொரோனா ஊரடங்கால் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் விற்பனையாகாமல் தேங்கி உள்ளதால், பட்டுக்கூடு விலை  தற்போது இறங்குமுகமாக காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியில் ஒரு கிலோ பட்டுக்கூடு 550 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 150 ரூபாய் முதல் 200 ரூபாயாக குறைந்துள்ளது. மேலும் கொரோனா ஊரடங்கால் நிச்சயதார்த்தம், திருமணம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுப காரியங்களை நடத்துவது  குறைந்ததால், பட்டு புடவை விற்பனையும் சரிந்து பட்டு புடவைகள் மற்றும் பட்டுநூல் பெருமளவு தேங்கி உள்ளது. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய பட்டுக்கூடு அங்காடியாக  விளங்கும் தர்மபுரி பட்டுக்கூடு அங்காடியின் பெயரை நிலைநாட்டவும், பட்டு விவசாயிகளை காப்பாற்றவும், தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதுதான் பட்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பு.

Categories

Tech |