காரில் உரிய ஆவணம் எதுவும் இல்லாமல் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொண்டு வந்ததை பறக்கும் படையினர் கண்டுபிடித்து அலுவலரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதை தடுக்கும் விதத்தில் பறக்கும் படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பறக்கும் படையினர் காவல்நிலையம் அருகாமையில் தீவிரம் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில் 2, 11, 500 ரொக்கப்பணம் மற்றும் கொலுசு, பாத்திரம், விளக்கு உள்பட 11 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பாக கார் ஓட்டுனர் ரவீந்திர குப்தா என்பவரிடம் விசாரணை நடத்திய போது உரிய ஆவணம் எதுவும் இன்றி அந்த வெள்ளி பொருட்களையும், பணத்தையும் எடுத்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பறக்கும் படையினர் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்து அலுவலர் துரைசாமிடம் ஒப்படைத்துள்ளனர்.