அனுமதி இல்லாமல் செம்மண் கடத்திய 15 பேரை காவல்துறையினர் கைது செய்ததோடு 12 டிராக்டர்கள் மற்றும் 2 பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கீழப்பாவூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் புங்கம் பட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் காளிமுத்து அனுமதி இல்லாமல் செம்மண் அள்ளிக்கொண்டு தனது நிலத்தில் உள்ள தாழ்வான பகுதியில் அந்த மண்ணை கொட்டி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 14 பேர் 12 டிராக்டர் மற்றும் 2 பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளி கொண்டிருந்தை பார்த்துள்ளனர். இதனை பார்த்தும் காவல்துறையினர் உடனடியாக செம்மண் கடத்த முயற்சி செய்தவர்களை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.
அதன்பின் காவல்துறையினர் மண் அள்ளியதற்குப் பயன்படுத்திய 2 பொக்லைன் எந்திரம் மற்றும் 12 டிராக்டர்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அனுமதியின்றி செம்மண் கடத்திய குற்றத்திற்காக காளிமுத்து உட்பட 15 பேர் மீது வழக்குப்பதிந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.