கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியா சிறந்த நடவடிக்கைகளை எடுத்து தலைமை பொறுப்பிற்கு உயர்ந்துள்ளது என அமெரிக்கா பாராட்டியுள்ளது
இந்தியா-அமெரிக்கா விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழுவின் இணை தலைவரான ஜார்ஜ் ஹோல்டிங் எம்பி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொடிய வைரசுக்கு எதிராக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளதால் தலைமைப் பொறுப்புக்கு இந்தியா உயர்ந்துள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்பு சிறப்பு வாய்ந்தது. தற்போதைய சூழலில் இது மேலும் வலுப்பெற்றுள்ளது. இந்தியா கொரோனா தொற்றை தடுக்க மிகவும் கடுமையாக போராடி வரும் சூழலில் அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் உதவி செய்து வருவது பாராட்டுக்குரியது.
அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா கொரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கு அமெரிக்காவிற்கு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அனுப்பி உதவி செய்துள்ளது. அதோடு அமெரிக்காவை சேர்ந்த 1500 பேரை விமானம் மூலம் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளது. இந்திய அரசு மட்டுமல்லாமல் அந்நாட்டை சேர்ந்த சேவா இன்டர்நேஷனல் எனும் தொண்டு நிறுவனமும் லட்சக்கணக்கான முகக் கவசங்கள், உணவு பொட்டலங்கள், மருந்துகள் உள்ளிட்டவற்றை அமெரிக்காவிற்கு கொடுத்துள்ளது.
இந்திய வம்சாவளியினர் இந்திய மாணவர்கள் தங்குவதற்கு இலவசமாக ஹோட்டல் அறைகளை கொடுத்துள்ளனர். இந்தியாவின் மகத்தான சேவை 10 ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவில் ஏற்படுத்திய தாக்கம் வியக்க வைக்கின்றது. சமூக, கலாச்சார எல்லைகளைத் தாண்டி சர்வதேச பிரச்சனையில் இந்தியா ஆற்றிய இந்த பணியை நினைத்தால் மிகவும் பெருமையாக இருக்கிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.