உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அச்சத்தில் உள்ளன. பிறப்பால் ஒரு இந்தியரும், அமெரிக்க குடிமகனுமான நோஷிர் கோவாடியா, அமெரிக்காவின் திருட்டுத்தனமான குண்டுவீச்சு ரகசியங்களை சீனாவுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல சக்திவாய்ந்த நாடுகளில் ஒரு பெரிய கவலை ஏற்பட்டுள்ளது. சீனாவை பொறுத்தமட்டில் எச்.20 பறக்கும் விமானங்களில், ரகசியமாக குண்டுகளை நிரப்பி வீசும் தொழிற்நுட்பத்தை தொட்டுவிட்டது.
12 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பறந்து சென்று தாக்கும் ஏவுகணை கூட அந்நாட்டின் வசம் உள்ளது. இது சர்வதேச அளவில் ராணுவத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
எச்.20 ரக தொழில்நுட்பத்தில் 10 முதல் 20 டன் வரை பொருட்களை நிரப்ப முடியும். 2025ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரிய ராணுவ புரட்சியை ஏற்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வரும் நோஷிர் கோவாடியா என்பவர் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை சீனாவுக்கு திருட்டுதனமாக விற்று விட்டார் என்ற தகவல் வெளியானது.
இந்த சம்பவம் 2005ஆம் ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி எஃப்.பி.ஐ. காதுகளுக்கு எட்டியது. தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் பல்வேறு கிடுக்கிப்பிடி விசாரணைகள் நடத்தப்பட்டது.
இதற்கிடையில் 2011ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி அவருக்கு அமெரிக்க நீதிமன்றம் 32 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவாடியாவின் வழக்கு விசாரணையில் பங்கேற்ற வழக்குரைஞர் கென் சோரன்சன் கூறும்போது, “இந்த வழக்கு தனித்தன்மை கொண்டது. இதுதொடர்பாக நீண்ட விசாரணை நடத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டுகளில் அவர் அமெரிக்கா வந்துள்ளார். அதன் பின்னர் அவர் அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 1986 ஆம் ஆண்டில் அவர் நார்த்ரோப் கார்ப்பரேஷனை விட்டு வெளியேறிய நேரத்தில் அவர் சீன உளவு நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.
தொடர்ந்து 2003ஆம் ஆண்டு சீனாவின் முக்கிய கடற்படை தளமான செங்டூவுக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 15 ஆயிரம் டாலர் வழங்கப்பட்டது. அவரின் அடுத்தடுத்த வருகையின் வாயிலாக அவரது ஸ்விஸ் வங்கிக் கணக்குக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் டாலர் அமெரிக்க டாலர் கைமாறியது.
இதன்மூலம் ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு சொகுசுத் தீவில் நிலம் வாங்கி வீடு கட்டினார். முடிவில் அமெரிக்க காவலர்கள் வசம் சிக்கிக் கொண்டார். கோவாடியா தனது தவறை மறைக்கவில்லை. ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க போர் தகவல்களை கோவாடியா சீனா மட்டுமின்றி இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் ஸ்விட்ர்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் ரகசியமாக விற்றுள்ளார். இதை அறிந்த ஆஸ்திரியா மற்றும் லிச்சென்ஸ்டைன் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க போர் தகவலுக்காக அவரை அணுகியுள்ளது.
இந்த நிலையில் அவர் வசமாக சிக்கிக் கொண்டார். அமெரிக்க ரகசியங்களை இந்தியர் ஒருவர் சந்தைப்படுத்தியது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னர் 1992ஆம் ஆண்டு சுப்ரமணியம் என்பவர் இதே குற்றச்சாட்டில் சிக்கினார்.
கோட்டா சுப்ரமணியம் ஒரு மென்பொறியாளர். இவர் ரேடார் குறித்த ஒரு முக்கியமான தகவலை ரஷியாவுக்கு விற்றார். இந்த வழக்கில் சுப்ரமணியம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மிகவும் குறைவு.