அமெரிக்காவில் உள்ள நோவாவேக்ஸ் நிறுவனம் புதிதாக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக நோவாவேக்ஸ் என்ற நிறுவனம் புதிதாக தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் சுமார் 29 ஆயிரத்து 960 பேர்களிடம் இந்த தடுப்பூசியானது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் இந்த தடுப்பூசியானது 90.4 சதவீதம் செயல்திறன் கொண்டது என்றும், கடுமையான, மிதமான நோயிலிருந்து 100% பாதுகாக்கும் என்றும், இந்தியாவில் உருமாறியுள்ள கொரோனாவுக்கு எதிராக நன்கு செயல்படுகிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்காவில் தடுப்பூசி மருந்திற்கான தேவைகள் குறைந்துள்ள நிலையில் அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியவுடன் தடுப்பூசிகளை வளர்ந்து வரும் நாடுகளுக்கு விற்க போவதாக அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. மேலும் நோவாவேக்ஸ் நிறுவனம் இந்த தடுப்பூசியை எடுத்துச் செல்வதும், இருப்பு வைப்பதும் சுலபம் என்று கூறியுள்ளது.
மேலும் சீரம் இந்தியா நிறுவனம் இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தடுப்பூசிக்கான அனுமதியை பெற்றால் கூடிய விரைவில் 15 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க முடியும் என்று நோவாவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நோவாவேக்ஸ் தடுப்பூசியை தயாரிப்பதற்கான உரிமையை இந்தியாவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கூடிய விரைவில் பெறும் என்று கூறப்படுகிறது.