Categories
தேசிய செய்திகள்

இஸ்லாமிய பயங்கரவாதம் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தல் – அதிபர் டிரம்ப்!

இஸ்லாமிய பயங்கரவாதம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்திய பயணமாக  இன்று மதியம் 12 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் மனைவி மெலனியா மற்றும் மகள் இவான்கா ஆகியோரும் வந்திருந்தனர். அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சொகுசு காரில் அங்கிருந்து காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று மனைவியுடன் சுற்றிப்பார்த்தார். அப்போது மோடி உடனிருந்து அங்கிருந்தவற்றை விளக்கினார்.

அதை தொடர்ந்து அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அகமதாபாத் கிரிகெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், இந்தியாவிற்கு எப்போதும் உண்மையான நட்பு நாடாக அமெரிக்கா விளங்கும் என உறுதியளித்தார். இந்தியாவை அமெரிக்கா நேசிக்கிறது என்றும், இந்தியா மீது அமெரிக்க மதிப்புகொள்வதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்தியாவின் மிகச்சிறந்த தலைவராக மோடி விளங்குவதாக புகழாரம் சூட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் தலைமையில் ஒவ்வொரு கிராமமும் மின்சார வசதியை பெற்றுள்ளது என்றும், மோடியின் தலைமையில் இந்தியா எந்த சாதனையையும் நிகழ்த்தும் எனவும் கூறினார். இந்தியர்களின் ஒற்றுமை உலக நாடுகளுக்கு ஒரு உதாரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் 70 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார வல்லரசு நாடாக மாறியுள்ளதாக தெரிவித்த அவர், உலக முழுவதும் வாழும் நடுத்தர மக்களின் தாயகமாக இந்தியா உருவெடுக்கும் எனவும், எல்லைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமை இருக்கிறது எனவும் தெரிவித்தார். அதேபோல இஸ்லாமிய பயங்கரவாதம்தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்று கூறிய டிரம்ப், பயங்கரவாத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கா செயற்படும் எனவும் உறுதியளித்தார்.

அத்துடன் ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க  தயாராக இருக்கிறோம். இந்தியாவிற்கான இராணுவ உதவிகளை தொடர்ந்து வழங்குவோம். இந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு நீடிக்க அமெரிக்கா தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இதன் முதற்கட்டமாக இந்தியாவுடன் 3 பில்லியன் டாலர் (21.5 ஆயிரம் கோடி) மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் நாளை கையெழுத்திடவுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு 100 வீதம் அழிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர் அல்பக்தாதி கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த ட்ரம்ப்,  தெற்கு ஆசியாவில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமெரிக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Categories

Tech |