அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் புடினை கொலையாளி என்று கூறியுள்ள நிலையில் அவர் இது தொடர்பாக செல்போனில் தனக்கு அளித்த பதில் திருப்தியாக இருந்ததாக ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் கடந்த வருடம் ரஷ்யா தலையிட்டதால் ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே கடும் பிரச்சனை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நேற்று நடைபெற்ற உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் சந்தித்து ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இரு தலைவர்களும் இரண்டு மணிநேர கலந்துரையாடலுக்கு பிறகு தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களில் ஒருவர் ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி மற்றும் பிற எதிர்ப்பாளர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் விஷம் கொடுத்து கொலை செய்ய முயன்றதாக கடந்த மார்ச் மாதம் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது நீங்களும் அவர் கொலையாளி என்று எண்ணுகிறீர்களா ?என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர் அப்படி தான் எண்ணுகிறேன் என்று கூறியிருக்கும் பதில் உலக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரின் இந்த பேட்டிக்கு பிறகு வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதர் அனடோலி அண்டனோ மீண்டும் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது அமெரிக்காவுடனான பிரச்சினையை தீர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் புடினிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது ஜோ பைடன் ஒளிபரப்புக்கு பின்பு தன்னை போனில் தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதில் இருவரும் சில விஷயங்கள் குறித்து பேசியதாகவும், அதில் அவர் எனக்கு அளித்த பதில் திருப்தியாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல் மனித உரிமை மீறல்கள் அமெரிக்க அதிகாரிகளால் நடப்பதை சுட்டிக்காட்டிய அவர் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமானவர்கள் யார் ? அந்த கொலைக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் ?என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இருநாட்டு தூதர்களும் இந்த விவகாரம் காரணமாக தங்களது சொந்த நாடுகளுக்கு சென்றுள்ள நிலையில் இருநாட்டு தலைவர்களுடைய இந்த சந்திப்பிற்கு பிறகு மீண்டும் அவர்கள் திருப்பி அனுப்ப ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.