Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருப்பூர் மற்றும் கோவையில் முகக்கவசம் கட்டாயம்…. மீறினால் கடும் நடவடிக்கை!

திருப்பூர் மற்றும் கோவையில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில், தமிழகத்தில் அசுர வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து  கொண்டே செல்வதன் காரணமாக தமிழகத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மொத்தம் தமிழகத்தில் 34 மாவட்டங்கள் கொரோனாவின் பிடியில் இருக்கிறது. அதிகபட்சமாக சென்னை, கோவை,  திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. நேற்று  தமிழகத்தில் 106 பேருக்கு கொரோனா  இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்,  பாதிப்பு எண்ணிக்கை 1,075  ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆக 1,173 அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலாளர்  பீலா ராஜேஷ் தெரிவித்தார். இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 98 பேரில்  அதிகபட்சமாக திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருப்பூரில்  இரண்டு நாட்களில் 53 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்தம் திருப்பூரில் 78 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. திருப்பூரில் கொரோனா வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் திருப்பூர் 3ஆவது இடத்தில் இருக்கிறது.  இந்த  நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என திருப்பூர் ஆட்சியர் விஜய்கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். அதேபோல 126 பேர் பாதிக்கப்பட்டு 2ஆவது இடத்தில் உள்ள கோவை மாவட்டத்திலும் அனைத்து தரப்பினரும் பொதுவெளியில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், முகக்கவசங்கள் இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

முன்னதாக  சென்னையில்  வீட்டைவிட்டு வெளியே செல்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |