அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதாக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறையில் இருந்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிறகு அவரது உடல் நிலை சீராக இருந்ததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் போது அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா சென்றுள்ளார் இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கட்சியில் எந்த பதவியிலும் இல்லாத சசிகலா அதிமுக கொடியை எப்படி பயன்படுத்துவது என்று அமைச்சர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக தமிழகம் டிஜிபி அலுவலகம் சென்ற அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் சிவி சண்முகம், ஜெயகுமார் மற்றும் கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளனர். மேலும் தமிழகத்திற்கு வரும் போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்கவும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் நேரடியாக புகார் அளித்ததால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை எற்படுத்தியது.