சுங்கத்துறை அதிகாரி வீட்டில் மர்ம நபர்கள் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பிரையண்ட் நகர் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடியில் உள்ள சுங்கம் துறையில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கல்யாணசுந்தரம் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசிக்கும் அவரின் மகள் வீட்டிற்கு சென்று விட்டனர். இதனையடுத்து கல்யாணசுந்தரம் சென்னையிலிருந்து தனது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் முன் பகுதியிலுள்ள கதவு உடைந்திருந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்களையெல்லாம் கீழே தள்ளிவிட்டு 70 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து கல்யாணசுந்தரம் உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின்படி போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்ட் கணேஷ் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்களின் கைரேகைகளை சேகரித்துள்ளனர். அங்கு காவல்துறையினர் சோதனை செய்தபோது கல்யாணசுந்தரம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் ஹார்டுடிஸ்கையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுது தெரிய வந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் கண்காணிப்பாளர் வீட்டில் 70 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.