உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததால் ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரெயில் நிலையம் அருகில் இரவு 9.45 மணியளவில் சென்னை – பெங்களூரு மற்றும் கோயமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வழியில் ரெயில் செல்லும் உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து தொங்கியது. அப்போது அதிலிருந்து திடீரென தீப்பொறி ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு சுண்ணாம்பு ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் டிரைவர் பார்த்து உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு விண்ணமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் காட்பாடி ரெயில் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் பச்சகுப்பம் ரெயில் நிலையம் அருகில் கேரள மாநிலம் மங்களூர் நோக்கி செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரெயில்வே எலக்ட்ரிக் பிரிவு ஊழியர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு உயரழுத்த மின் கம்பியை சரிசெய்தனர். இதனால் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. மேலும் சரக்கு ரெயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்நிலையில் உயரழுத்த மின்கம்பி அறுந்து விழுந்த நேரத்தில் சில ரெயில்கள் தாமதமாக வந்ததால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.