சிக்னல் கிடைக்காததால் உயரமான கட்டடத்திற்கு சென்ற வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எழுமாத்தூரில் தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்று அமைந்துள்ளது. இந்த மில்லில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிகாஸ்திகா (19) என்ற இளைஞர் தனது உறவினர்களுடன் தங்கி வேலை செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று மாலையில் பணியை முடித்துவிட்டு பிகாஸ்திகா வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது உறவினர் ராஜேஷ் ஓரம் என்பவருடன் பிகாஸ்திகா வீட்டிற்குள் இருந்து செல் போனில் ஃப்ரீ பையர் கேம் விளையாடி உள்ளார். வீட்டிற்குள் சிக்னல் கிடைக்காததால் வீட்டின் அருகே உள்ள கொய்யா மரத்தில் ஏறியுள்ளார். பின்னர் ஆஸ்பெட்டாஸ் கூரையில் நடந்துசென்று உயரமான கட்டிடத்தின்மேல் அமர்ந்து கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
பின்பு கேமை முடித்துவிட்டு இரவு 7 மணியளவில் கட்டிடத்திலிருந்து கீழே இறங்கி உள்ளார். அப்போது தவறி ஆஸ்பெஸ்டாஸ் கூரை மீது விழுந்ததில் கூரை வலுவிழந்து உடைந்துள்ளது. இதில் பிகாஸ்திகாவுக்கு தலை, கை, வயிறு போன்ற பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர் . ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிகாஸ்திகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.