உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதற்காக நிதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐ.நா.சபை உயிரியல் பன்முகத்தன்மையின் 15வது தலைவர்கள் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் சீனா அதிபர் ஜி ஜின்பிங் காணொளி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதில் “உலகிலேயே அதிக அளவில் கார்பன் வெளியேற்றத்தை கொண்ட நாடாக சீனா உள்ளது. இதனை வரும் 2060 ஆம் ஆண்டிற்குள் குறைப்பதற்கான இலக்கு நிர்ணயித்துள்ளோம். மேலும் தொழில் துறை மற்றும் எரிசக்தி கலவையை தொடர்ந்து மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தீவிரமாக பெருக்குவோம்.
இதனை தொடர்ந்து மணல் பரப்பு மற்றும் பாறை நிறைந்த பகுதிகளில் காற்றாலையை ஏற்படுத்துவோம். சீனா நவீன சுற்றுச்சூழலை உருவாக்குவதில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் யுனான் மாகாணத்தில் யானை கூட்டங்கள் மீண்டும் தங்களது வசிப்பிடங்களுக்கே திரும்பி சென்று விட்டன. குறிப்பாக காட்டு விலங்குகளை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நல்ல பலனை அளித்துள்ளது.
அதிலும் வளரும் நாடுகளில் பல்லுயிர் தன்மையை பாதுகாப்பதற்காக தனது ஆதரவு தெரிவிக்கும் விதமாக சீனா 1700 கோடியை வழங்கியுள்ளது. இதேபோல மற்ற நாடுகளும் தங்களது பங்களிப்பை தர முன்வர வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழல் இலக்குகள் ஆர்வம் கொண்டவைகளாக மட்டுமின்றி நடைமுறைப்படுத்துவது போன்றும் இருக்கவேண்டும். அவை சமநிலையை ஏற்படுத்தும் விதமாகவும் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.