Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாடகை கேட்டதால் ஆத்திரம் – வீட்டு உரிமையாளர்களுக்கு கத்திக்குத்து..!!

சென்னை சூளைமேடு பகுதியில் வாடகை கேட்டதால் வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர் கத்தியால் குத்தியதில்  ஒருவர் உயிரிழந்த நிலையில், இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை சூளைமேடு அருகே ராதாகிருஷ்ணன் இரண்டாவது தெருவில் சந்திரமோகன் என்பவருக்கு சொந்தமான  வீட்டில் பெயிண்டர் வேலை பார்த்துவரும் நாராயணன் என்பவர் இரண்டு மகன்களுடன் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கொரோனா கால ஊரடங்கு காரணமாக வேலை இல்லாததால் கடந்த ஐந்து மாத வாடகை பாக்கியை நாராயணன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் சந்திரமோகன் மற்றும் அவரது மனைவி கலாவதி இருவரும் பல முறை வாடகை கேட்டு நாராயணனிடம் பேசியுள்ளனர். நேற்று முந்தினம் இரவு வேலைக்கு சென்று திரும்பிய நாராயணனிடம் மீண்டும் சந்திரமோகன் அவரது குடும்பத்தினரும்  வாடகை குறித்து கேட்டுள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த நாராயணனுக்கும், சந்திரமோகனுக்கும்  இடையே வாக்குவாதம் முற்றி உள்ளது.

அப்போது சத்தம் கேட்டு சந்திரமோகனின் மகன் சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யா இருவரும் மேலே சென்றனர். இதை கண்டதும் ஆத்திரமடைந்த நாராயணன் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சந்திரமோகன், சதீஷ் மற்றும் அவரது மனைவி சுகன்யாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் சுகன்யாவின் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே மயங்கி விழுந்தார்.

மற்ற இருவரும் வயிற்றுப்பகுதியில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தகவலறிந்து சென்ற சூளைமேடு போலீசார் பூங்கோதையின் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சதீஷின் மனைவி சுகன்யா உயிரிழந்தார். மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கொலை செய்த நாராயணனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |