வாடிக்கையாளர்களின் கோரிக்கைக்கு இணங்க போலி கணக்குளை முடக்கியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் முகநூல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் புகார்களை தெரிவித்துள்ளனர். அதிலும் ஒருவரின் சுய விவரங்கள் மற்றும் ரகசியங்களை பாதுகாப்பது தொடர்பாக அதிகமான புகார்கள் எழும்பியுள்ளது. இந்த புகார்களை சரிசெய்வதாக கூறினாலும் சில நேரங்களில் தங்கள் மீதுள்ள தவறுகளையும் முகநூல் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை அகற்றி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர். இதனையடுத்து இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் சுமார் 300 கோடி போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் நடத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,300 கோடி டாலர்களை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு சுமார் 40,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருவதாகவும் முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது.